Saturday, 21 October 2017

தவறான முன்னுதாரணத்தை உண்டாக்கிச் செல்லும் சங்கத் தலைமைகள்......

தவறான முன்னுதாரணத்தை உண்டாக்கிச் செல்லும் சங்கத் தலைமைகள்......

1984 , 1988 , 2003 போராட்ட காலங்களில் நடந்த ,தன்னலமற்ற போராட்டங்களைச் சுட்டிக்காட்டியே போராட்டக் களங்களை அமைத்து , அதிக எண்ணிக்கையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை கூட்டத்திற்காக மட்டுமே வைத்துக்கொண்டு , தனக்கு வேண்டியதைப் பெற்றுவிட்டு , இடைநிலை ஆசிரியர்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் சுயநலத்தலைமைகள்,  தங்கள் முன்னோர்கள்  இப்படி ஒரு துரோகச் செயலை செய்திருந்தால் தங்கள் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

1984, 1988, 2003 -ல் போராடியவர்கள் தன் குழந்தை, தன் உறவினர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்களே, அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே உயிரைக் கொடுத்துப் போராடினார்கள். ஆனால் இன்றுள்ள தலைமைகளின் குழந்தைகள் மருத்துவம் , பொறியியல் படிப்பதால் தனக்குத் தேவையானதைப் பெற்றுக்கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள்.

குறைந்த பட்சம் தனக்குக் கீழுள்ள மாவட்டச் செயலாளர்களிடம் கூட தங்களின் துரோகத்திட்டத்தைக் கூறாததால்தான், துரோகமிழைத்த சங்கங்களின் மாவட்ட , வட்ட நிர்வாகிகள் தலைகுனிந்து வெட்கத்தோடு செல்கிறார்கள்.

6வது ஊதியக்குழுவில் எந்த யுக்தியைக் கையாண்டார்களோ, அதே யுக்தியைத்தான் இன்றும் அரங்கேற்றியுள்ளார்கள். 2010 -ல் நடந்த சென்னை பேரணியில் பிரிவினையை உண்டாக்கி, பாதகத்திற்கான முதல் புள்ளியை வைத்துவிட்டு, டிசம்பரில் நடந்த இறுதிக்கட்ட 5 நாள் போராட்டத்தை 3 நாட்களிலேயே தங்களுக்கு வேண்டியதைக் கொடுக்கத் தயாராக இருந்ததால , 750-க்கு சரி  என்று துரோகம் செய்து மிகப்பெரிய  பாதிப்பை உண்டாக்கிய அதே தலைமைகள்தான், இன்றும் அதைவிடக் கேவலமான துரோகத்தை செய்துவிட்டு சிரித்த முகத்துடன் முதல்வர் வீட்டின் வாசல்படியில் நின்று நன்றி சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.

இதில் ஒரு சங்கத்தலைமை ₹2000 தன் ஊதியத்திற்கு ஊதிய உயர்வையும், அகவிலைப்படியையும் ஆணையாகப்  பெற்றுத்தருவோம் என்று வாக்குக் கொடுக்கிறார்கள். அதையும் அந்த இயக்கத்தைச் சார்ந்த இடைநிலை ஆசிரியப் பெருமக்கள் ஏற்றுக்கொண்டு ஊமைகளாகத்தான் இருக்கிறார்கள்.

2009-ல் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு இயக்கத்தின் தலைமை சொன்ன வார்த்தை. " நீ பணிக்கு வந்து எவ்வளவு நாளாகிறது, உனக்கு 9300  + 4200 கொடுத்தால் உனக்கு ஊதிய உயர்வு 60 % வரும் , எங்களுக்கு 40% கூட வரவில்லை கொடுத்ததை வங்கிக் கொண்டு அமைதியாக இரு " என்று.

இத்தகைய சுயநலவாதிகளின் சங்கத்தில் இப்போது இருப்பவர்கள் , பிற்காலத்தில் நிர்வாகிகளாக எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள். சுயநலத்தையும் , துரோகம் ஒன்றை மட்டுமே கொள்கைகளாக வைத்துக் கொண்டிருக்கும் தலைமைகளால்தான் இன்று இயக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

" கூத்தாடி இரண்டுபட்டால் ஊருக்குக் கொண்டாட்டம்" என்பதுபோல்தான் இன்று அரசுகளும் பேரம்பேசி அடிமைகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு அநீதி இழைத்திருக்கிறது.

ஒரு சங்கத் தலைமை
  சொல்கிறார் " உங்களுடைய கோபம் அரசு மீதுதான் இருக்க வேண்டும்,  பின்வாங்கிய எங்கள்மேல் இருக்கக்கூடாது " என்று . 2013, 2014-ல் தான் பணியில் சேர்ந்துள்ளேன். என்னுடைய பணிக்கு பாதிப்பு வருமே என்று கூறியபோது " நாங்கள் பார்த்துக் கொள்வோம்,  நீ வா என்று ஆகஸ்டு- 22-ல் அனைத்துப் பள்ளிகளையும் மூடிவிட்டு , கூட்டத்தைக் காட்டி உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டு சிரித்த முகத்தோடு நன்றி சொல்லிவிட்டு வந்ததற்கு என்ன அர்த்தம்.
இனிமேலாவது இப்படி ஒரு " __________ " வேலை பார்க்காதீர்கள்.

அடுத்த தலைமுறையாவது தன்னலம் பாராது போராடட்டும்.

" வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி

பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி "

இதில் நீங்கள் எந்த ஜாதி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அ. இஞ்ஞாசிமுத்து ( வயது 47 )
இடைநிலை ஆசிரியர்
ஆர்.எஸ்.மங்கலம் - ஒன்றியம்.
இராமநாதபுரம்- மாவட்டம்.

No comments:

Post a Comment